Wednesday, May 8, 2013

* சிரிக்கச் சிரிக்க வாழ்க்கை சிறக்கும்!

 

சிரிப்பு நல்ல மருந்து என்று கூறுவார்கள். அதேபோல உடல் மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றமைக்கு யோகாசனம் உதவுகின்றது. சிரிப்பு, யோகாசனம் இரண்டையும் கலந்து ஆக்கப்பட்டு இருக்கின்ற பயிற்சி நெறிதான்சிரிப்பு யோகா.1995 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. உலகின் 60 நாடுகளில் நிலைபெற்று உள்ளது. 

வியட்நாம் சிரிப்பு யோகா

குறிப்பாக வியட்னாம் நாட்டில் இது மிகவும் பிரசித்தி வாய்ந்ததாக இருக்கிறது. மகிழ்ச்சி, நோயெதிர்ப்பு சக்தி, அமைதி ஆகியவற்றை நாளாந்த வாழ்வில் பெற்றுத் தரும் என்று வியட்னாம் மக்கள் நம்புகின்றனர். மாஸ்டர் லீ ஆன் சென் இன் வழிகாட்டலில் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக தலைநகரில் உள்ள பூங்கா ஒன்றில் ஒவ்வொரு நாள் காலையும் 45 நிமிடங்கள் வரை பயிற்சி பெறுகின்றனர்.

சிரிப்பு யோகாவானது சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நட்பின் ஆழத்தை அதிகரிக்கச்செய்கிறது. ஒருவருக்கொருவர் பார்த்து புன்னகைத்துக்கொள்ளுங்கள் என்று வியட்நாம் நாட்டில் சிரிப்பு யோகாவை அறிமுகம் செய்த லீ ஆன் சென் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நோயின் கதை

நாம் சிரிக்கும் போது மூளையில் வெளிப்படும் வேதி பொருட்களுக்கு என்டார்பின்கள் என்று பெயர். இவை உடலுக்கு இயற்கையான வலி நிவாரணிகளாகவும் பயன்படுகின்றன. இதனால் மன அழுத்தம் விலகி உடல் குணமாகிறது. உடலை பலவீனமாக்கும் “ஆங்கைலோ ஸ்பான்டிலிடிஸ்” என்ற நோயால் நார்மன் கசின்ஸ் என்பவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தங்களால் அவருக்கு உதவ முடியாது என்றும் உட்காருவதற்கு முன் வலியால் அவர் சித்திரவதைக்கு உள்ளாவார் என்றும் கூறிவிட்டுச் சென்றனர்.

அதைப்பற்றி கவலைப்படாத கசின்ஸ் ஒரு ஓட்டல் அறையில் தங்கி, நகைச்சுவை படங்களாக பார்த்தார். மீண்டும் மீண்டும் அந்த படங்களைப் பார்த்து வயிறு குலுங்க சிரித்தார். இப்படி 6 மாதமாக அவர் சிரிப்பு வைத்தியம் செய்து கொண்ட பின் அவர் நோய் முற்றிலும் குணமானது. இந்த அற்புதமான அனுபவத்தை அவர் ஒரு நோயின் கதை என்ற நூலில் எழுதினார். இதன் பிறகு என்டார்பின்களின் செயல் பற்றி தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்தன.

எண்டார்பின்களானது மார்பின், ஹெராயின் போன்ற வேதியியல் அமைப்புக் கொண்டவை. இவை உடலை அமைதியாக்கும் குணம் கொண்டவை. இதனால் சந்தோஷமானவர்களுக்கு நோய் வருவதில்லை. பலவீனமடைவதில்லை. ஆனால் புலம்புகிறவர்கள் எப்போதும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையின் கஷ்டங்களை நீக்குவதற்கான வழிமுறைகள் தெரியாததால் தான் பலரும் போதைக்கு அடிமையாகின்றனர். தடைகளை விலக்கி மக்கள் அதிகம் சிரிக்கவும் என்டார்பின்கள் சுரக்கவும் மனது உதவுகிறது.

இதனால் தான் எளிதில் தங்களை மாற்றிக் கொள்பவர்கள் மது அருந்தும் போது அதிகம் சிரிக்கிறார்கள். அதே சமயம், சந்தோஷமற்றவர்கள் மது அருந்தும் போது இன்னும் சோர்வடைகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி

ஆண்களைவிட பெண்களே அதிகம் சிரிக்கிறார்கள். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் புன்னகைப்பதாக ஆராய்ச்சிகளில் தெரிகிறது. பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பெண்கள் இயல்பாகவே கருணையும் அமைதியும் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.

புன்னகையும், சிரிப்பும் நோய், எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்நொடி வராமல் உடலை பாதுகாக்கின்றன. உடலுக்கு அவை மருந்தாகின்றன. அதிகமான நபர்களை கவர்கின்றன. வாழ்நாளை நீடிக்கின்றது. எனவே சுயமாக சிரிக்க முடியாவிட்டால் மருந்தாக நினைத்து கஷ்டப்பட்டாவது சிரியுங்கள். அது உங்கள் உடலுக்கு நல்லது.

* சிறுமிக்காக தெருவோரத்தில் அமர்ந்திருந்த இளவரசர்

சிறுமிக்காக தெருவோரத்தில் அமர்ந்திருந்த இளவரசர்


பள்ளி சிறுமிக்காக தெருவோரத்தில் அமர்ந்திருந்த அபுதாபி இளவரசரால் பரபரப்பு ஏற்பட்டது.
அபுதாபியின் இளவரசரும், இராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர், செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த இளவரசர் உடனே காரை விட்டு இறங்கி சிறுமியிடம், ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய்? என கேட்டார்.

அதற்கு அச்சிறும், எனது தந்தை அழைத்து செல்ல இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிலளித்தார்.

உடனே, தனது காரில் இறக்கிவிடுவதாக இளவரசர் கூறினார், அதற்கு சிறுமியே முன்பின் தெரியாத நபர்களிடம் பேசக்கூடாது என தன் தந்தை தெரிவித்ததாக கூறியுள்ளார்.

உடனே உதவியாளர் அச்சிறுமியிடம், இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.

இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர்.

* கணக்கு புதிர்



இது ஒரு கணக்கு புதிர், கீழ்கண்ட நடை முறைகளை, பின் பற்றி கணக்கு செய்தால் விடை "2" மட்டுமே வரும்...

1) ஒரு நம்பரை மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள்...

2) அதை 3-ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்

3) வரும் விடையுடன் 6-யை சேர்த்துக் கொள்ளுங்கள்

4) பின்பு மீதியை 3-ஆல் வகுத்து விடுங்கள்

5) கடைசியில் நீங்கள் மனதில் நினத்த எண்ணால் கழித்தால் எப்பொழுதும் "2" மட்டுமே வரும்


இவைகளும் ஒரு கணக்கு புதிர் தான்...

* கணக்கு புதிர்


1-லிருந்து 9-க்குள் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள் அந்த எண்ணை கீழ்க்கண்ட எண்களால் வரிசையாக பெருக்கினால் நீங்கள் நினைத்த எண்ணே 6-முறை இடம்பெறும். 

முதலில் 7-ஆல் பெருக்கவும், பின்பு 3-ஆல், அதன் பின்பு 11-ஆல், பிறகு 37-ஆல், கடைசியாக 13-ஆல் பெருக்க வேண்டும்.

(உதாரணம்:- 1, 1X7=7, 7X3=21, 21X11=231, 231X37=8,547, 8547X13=111111.)




1-முதல் 9-வரை உள்ள எண்களை வைத்து 9-கட்டங்களை நிறப்பி எப்படி கூட்டினாலும் கூட்டுத் தொகை 15 வரும் படம்

* ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?


ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி? கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்! மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான். இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம். ******************************************************************************************************************************* கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்? மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க கணவன்: அவ்ளோதானா? மனைவி: முடியலைங்க! இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க! ******************************************************************************************************************************* கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா? மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்! இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க! ******************************************************************************************************************************* கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே? மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா? இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க! ******************************************************************************************************************************* கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க? மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க! இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க! ******************************************************************************************************************************* கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல? மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு! இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க! ******************************************************************************************************************************* கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா? மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க! இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க! ******************************************************************************************************************************* கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்? மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க! இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க...!

* மன அழுத்தத்தின் போது என்ன நடக்கிறது?


நவீன வாழ்க்கை தரும் பெரிய சாபம் மன அழுத்தம். குழந்தைகள்கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. தலை முடியில் தொடங்கி கால்கள் வரைக்கும் உடலின் பெரும்பாலான பாகங்களைப் பாதிக்கக் கூடியது மன அழுத்தம்.
ஆனால், அது தொடர்பான நம்முடைய புரிதல்கள் மிகக் குறைவு. மன அழுத்தம் ஏற்படும் போது உடலில் என்னவெல்லாம் நடக்கும்?

இனப்பெருக்க மண்டலம்
அதிகப்படியான தொடர் மன அழுத்தத்தின்போது அட்ரினலில் இருந்து சுரக்கப்படும் கார்டிசால் என்ற ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இது இனப்பெருக்க மண்டலத்தின் வழக்கமான பணியைப் பாதிக்கும். நீண்ட நாள் மன அழுத்தம் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் மற்றும் விந்தணு உற்பத்தியைப் பாதித்து, ஆண்மைக் குறைபாட்டுக்கு வழிவகுக்கலாம். பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தால் ஒழுங்கற்ற மாதவிலக்கு அல்லது முன்கூட்டியே கடுமையான வலி கொண்ட மாதவிலக்கு ஏற்படலாம். மேலும், உடல் உறவு மீதான ஈடுபாட்டையும் இது குறைக்கும்.

நரம்பு மண்டலம்
மன அழுத்தத்தின்போது நம்முடைய உடல் மிக விரைவாக அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள தன்னைத் தயார்ப்படுத்தும். மூளையில் இருந்து அட்ரினலுக்கு சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு, கார்டிசாலைச் சுரக்கச் செய்யும். இது இதயத் துடிப்பை அதிகரித்து ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தும். உணவுச் செரிமான மண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தலாம். பதற்றச் சூழல் மறையும் வரை நம்முடைய உடல் இயல்பு நிலைக்குத் திரும்பாது. தொடர் மன அழுத்தம் தூக்கத்துக்கும் உலை வைக்கும்.

தசைகள்
மன அழுத்தத்தின்போது உடல் தசைகள் கடினமாகும். இது நீடிக்கும்போது தலைவலி, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகும்.

சுவாச மண்டலம்
மன அழுத்தம் மூச்சை அதிகமாக உள் இழுத்து வெளியே விடச் செய்யும். இது சிலருக்குப் படபடப்பு மற்றும் மாரடைப்பைக்கூட ஏற்படுத்தலாம்.

நாளமிள்ளாச் சுரப்பிகள் அமைப்பு
மன அழுத்தம் ஏற்படும்போது மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் சுரப்பியில் இருந்து அட்ரினல் சுரப்பிக்கு சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன. அது கார்டிசால் உள்ளிட்ட சில ரசாயனங்களைச் சுரக்கும். இந்த ரசாயனங்களை மன அழுத்த ஹார்மோன்கள் என்று கூறுவார்கள். இவை சுரக்க ஆரம்பித்ததும், கல்லீரல் அதிக அளவில் குளுகோஸை உற்பத்தி செய்யும்.

இதயச் செயல்பாடு
திடீரென ஏற்படும் மன அழுத்தமானது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதைப் போன்றது. மன அழுத்தத்தால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் இதயத் தசைகளும் ரத்த நாளங்களும் வேகமாகவும் அதிகமாகவும் செயல்படும். தொடர்ந்து இப்படி நிகழும்போது ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படும்; மாரடைப்புக்கும் வழிவகுக்கும்.

செரிமான மண்டலம்
மன அழுத்தம் இருக்கும்போது வழக்கமாக உண்பதைக் காட்டிலும் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடத் தூண்டும். நீங்கள் அதிகமாக சாப்பிடும்போதோ அல்லது புகையிலை மற்றும் மது போன்ற பொருட்களை உட்கொள்ளும்போதோ அது நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பதுபோன்ற உணர்வு, வாந்தி, வயிற்று வலி போன்றவை ஏற்படும். இறைப்பையின் செரிமானத் திறன் பாதிக்கப்படும். இதன் விளைவாக, ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கும் திறன் பாதிக்கப்படும். மேலும் வயிற்றில் உணவின் பயணத்தையும் பாதிக்கும். இதனால், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படும்.

* பெண்கள் தைரொக்ஷிக் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்

பொதுவாகவே இன்று பெண்கள் தத்தமது அழகினை மெருகேற்றிக் கொள்வதிலும் அதனை பேணுவதிலும் மிகவும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். 

அந்தவகையில் இந்த தைரொயிட் சமச்சீர் அல்லாத நிலையால் ஏற்படும் கழுத்து வீக்கம் அல்லது கட்டி தொடர்பாக ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அவர்கள் விஷேடமாக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகின்றது.

தைரொயிட் என்பது கழுத்துப் பகுதியில் சுரக்கும் ஒரு சுரப்பியாகும். இது தைரொக்ஷின் என்கின்ற ஹோமோனை சுரந்து எமது உடலில் எற்படுகின்ற அனுசேப வீதங்களை கட்டுப்படுத்துகின்ற பணியை செய்கின்றது.

இந்த தைரொக்ஷின் அளவு எமது உடலில் கூடும் போதோ அல்லது குறைகின்ற போதோ எற்படுகின்ற பாதிப்புகள் ஏராளம். அது சாதாரணமாக கண்களுக்கு தெரியாது.

ஒரு சிலருக்கு தொண்டையில் வீக்கம் ஏற்படும். இதனை நாம் கண்டக்காளை என அழைக்கின்றோம். எனவே கண்டக்காளையை ஏற்படுத்தும் முக்கியமானதொரு ஹோமோனாக இந்த தைரொக்ஷின் விளங்குகின்றது.

பெண்களை பொறுத்தவரைக்கும் அவர்கள் பூப்படைதல் மற்றும் கர்ப்பம் தரித்தல் போன்ற நேரங்களிலேயே தைரொக்ஷின் அதிகமாக சுரக்கப்படுகின்றது.

அதன் சமச்சீர் தொடர்பான அளவுகோளினை அறிந்துகொள்வதோ அல்லது அது தொடர்பான பிரச்சினைகளை அணுகுவதோ ஒரு சிக்கலான விடயமாகவே இருக்கின்றது. எனவே தொண்டையில் ஏதேனும் வீக்கம் மற்றும் கட்டிபோன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் நாம் வைத்தியரை அணுகுவதே சிறந்ததொரு வழியாக அமையும்.

எமது உடலில் இந்த தைரொக்ஷின் அளவு அதிகரிக்கும்போது எவ்வாறான அறிகுறிகளை எற்படுத்துகின்றது என்று இப்போது நாம் பார்ப்போம்.

01. கை, கால்களில் நடுக்கம் ஏற்படும்.
02. உடல் அதிகமாக வியர்க்கும்.
03. பசிக்கும் தன்மை அதிகரித்துக் காணப்படும்.
04. உடல் மெலிந்து கொண்டே போகும்.
05. எந்த காரியத்தை செய்வதிலும் ஒரு பதற்ற நிலைமை காணப்படும்.
06. எந்வொரு வேலையிலும் முழுமையாக கவனஞ் செலுத்த முடியாமல் போகும்.
07. கோப உணர்ச்சி மேலோங்கி காணப்படும்.
08. சிலருக்கு வயிற்றோட்டம் எற்படும்.
09. மாதவிடாயில் பிரச்சினைகள் ஏற்படும்.

அடுத்து நாம் தைரொக்ஷின் அளவு உடலில் குறைவடையும் பொழுது எவ்வாறான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது என்பதனை பார்ப்போம்.

01. உடல் சோர்வடையும்.
02. எதிலும் ஓர் ஆர்வம் இல்லாத தன்மை காணப்படும்.
03. தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.
04. உடற் பருமன் அதிகரித்துக் கொண்டே போகும்.
05. பசியல்லாத தன்மை காணப்படும்.
06. தூக்கத்தில் ஒழுங்கில்லாத தன்மை ஏற்படும்.
07. மலச்சிக்கள் ஏற்படும்.

அது மட்டுன்றி இந்த தைரொயிட் சுரப்பியின் சமச்சீரற்றத் தன்மையால் மாதவிடாய் காலங்களில் குருதி வெளியேற்றமும் அதிகமாக காணப்படும்.

எனவே உங்கள் கழுத்துப் பகுதியில் வீக்கம் அல்லது கட்டி போன்று காணப்படுவதுடன் மேற்குறிப்பிட்ட ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாயின் நீங்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது சிறந்ததொரு முறையாக அமையும்.

தைரொயிட் சமச்சீரற்ற தன்மையால் தொண்டையில் ஏற்படும் கட்டி அல்லது வீக்கத்திற்காக நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இவ்வாறான அறிகுறிகளை உடையவர்கள் வைத்தியர்களை அணுகி முறையான இரத்த பரிசோதனைகள் மற்றும் தொண்டையில் ஏற்படுகின்ற கட்டிகளில் ஊசியை ஏற்றி களங்களை பரிசோதிப்பதன் வாயிலாகவும் இது கண்டக்காளையா அல்லது புற்றுநோயா என்பதை துள்ளியமாக தெரிந்துகொள்ள முடியும்.

பின்னர் அதற்கேற்ப நாம் வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டு கண்டக்காளை ஏற்படுவதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளவதோடு பெண்கள் தங்களின் அழகினை தொடர்ந்தும் பேணிக்கொள்ளவும் முடியும்.