Tuesday, May 7, 2013

* ஏழைப்பெண்ணின் உள்ளக்குமுறல் !



அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஏழைப்பெண்ணின் உள்ளக்குமுறல் !

மன ஊனமில்லா மணமகன் தேவை ‘’


பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’ (அல்குர்ஆன் : 4:4)


வல்ல அல்லாஹ் மணமகளுக்கு மஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல நீ கொடுக்க வேண்டிய மஹரை பெண்ணான என்னிடம் கேட்க நீ கேட்ட மஹரை கொடுக்க என் தந்தையோ இன்னும் பாலை வெயிலில் தன் அனைத்து சுகங்களையும் இழந்து! என்னைப் பார்க்க வந்த உன் தாயும், உன் சகோதரியும் பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள் என்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன் வெளிறிய பார்வையுடன் என்னை பார்த்து எங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார் நீங்கள் தெளிவாக சொன்னால்தான் அடுத்த பேச்சுகளை தொடங்குவோம்!

உன்தாயின் பட்டியல் தொடங்கியது லட்சத்துடன் - பால்குடம், தயிர்குடம் பிறை அனைத்தையும் கணக்கு எடுத்து ஒரு வருட விதவிதமான சீர், நகை பின் எத்தனை பேருக்கு சாப்பாடு தருவிய எத்தனை பேருக்கு பசியாற தருவிய! (சாப்பாட்டையே பார்க்காத மாதிரி) மனை உள்ளது வீட்டை கட்டி கொடுத்து விடுங்கள்! (தற்பொழுது குடிசைதான் வீடாம்) என் குடும்ப சூழ்நிலையில் இந்த சம்பந்தம் அமையுமா மணமேடையில் அமருவோமா என்று மனதுக்குள் அழ! என் தந்தையோ நோயின் வாசல்படியை தட்ட நானோ வீட்டின் நிலைப்படியில்! எத்தனையோ பேர் என்னை பெண் பார்த்து சென்ற பிறகும் இன்னும் முதிர் கன்னியாக உனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை!

ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்! பெண் பார்க்க வந்தவர்களில் சிலர் என் பையன் சிகப்பு பெண்தான் பார்க்க சொல்கிறான் பெண் கருப்புதான் இருந்தாலும் நாங்கள் கேட்பதை (வரதட்சனையை) தந்து விட்டால் என் பையனை சம்மதிக்க வைத்து விடுகிறோம்! பணம் படைத்தவர்களின் கருப்பு நிற பெண் கரையேறி விடும்! பணம் இல்லா குடும்பத்து கருப்பு நிற பெண்களை கடலில் தள்ளி விடலாமா? பெண்ணை பெற்றவன் ஜமாத்தில் லட்டர் வாங்கி ஊரில் பிச்சை எடுத்தால் கேவலம் என்று முகம் தெரியா ஊரில் பள்ளியில் தொழுகை முடிந்தவுடன் பாவா குமராளி வந்திருக்கிறேன் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது உதவி செய்யுங்கள் என்று துண்டை ஏந்தி நிற்பதை பார்த்திருக்கிறாயா? பார்த்தவுடன் கோபம் வரவில்லையா? என்ன செய்தாய் நீ? என் தாய் தந்தை மனம் கோணாமல் நடப்பேன் என்றாய்! இளைஞனே திருமணம் முடிக்கும் நாள்வரை வீரபேச்சுக்கள் உன்னிடத்தில் மணப்பெண் பார்க்க ஆரம்பித்தால் இதுநாள்வரை தாய், தந்தை பேச்சைகேட்காத நீ கூட திருமண பேச்சு வார்த்தையில் மட்டும் என் தாய் தந்தையின் மனம் நோக நடக்கமாட்டேன் என்கிறாய்! இளைஞனே உன் தெருவில் திருமண வயதில் ஏழை பெண்ணிருக்க நீயோ பணம் படைத்த வீட்டில் பெண்ணை தேட! அவளும் திருமண வயதை தாண்டிய பிறகு வேற வழி இல்லை என்று பிறமத பையனோடு ஓட! இப்பொழு வருகிறது உனக்கு கோபம் என் தெரு பெண்எப்படி ஓடலாம்! அவளை கண்டால் வெட்டுவேன் என்று! அவள் ஓடியதற்கு நீயும் உன்னை போன்றவர்களும் காரணம் இல்லையா? முகமூடி திருடன் இரவில் திருடுகிறான் நீயோ முகமூடி இல்லாமல் குடும்பத்தோடு பகல் நேரத்தில் பலரின் அங்கீகாரத்தோடு கொள்ளை அடிக்கிறாய் வரதட்சனை என்ற பெயரில் மணமகள் வீட்டில் மனசாட்சியும் இல்லை! மறுமை பயமும் இல்லை உனக்கு! மணமகனே நான் உன்னிடம் கேட்கிறேன் நீ என்ன மஹர் தருவாய் எனக்கு - எதற்காக என்கிறாயா?

உன் வீட்டில் வந்து ஆயுள் முழுவதும் உனக்கும் உன் குடும்பத்திற்கும் சேவை செய்வதற்கும்! குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக! உன் பிள்ளையை பெற்று தந்தவுடன் நானும் தகப்பன் என்று பெருமிதம் அடைவதற்காக! என் தாய் தந்தையை என் உடன்பிறந்தவர்களை, தோழிகளை நான் வாழ்ந்த இடத்தையே விட்டு விட்டு நீ காட்டில் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடு வருவதற்கு! - எத்தனை லட்சம்? மஹர் தருவாய்?

இளைஞர்களே! இன்னுமா உறக்கம்! உறக்கத்திலிருந்தும் மன ஊனத்திலிருந்தும் விழித்தெழுங்கள்! இந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம் நாளை மஹ்ஷர் பெருவெளியில் இறுதி தீர்ப்பின் நாளின் அதிபதியாம் வல்ல அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்வாய் தாய் தந்தையை கை காட்டுவாயா?

முடியாது இளைஞர்களே! நீங்கள் மட்டும்தான் உங்களின் காரியத்திற்கு பதில் சொல்வீர்கள் வல்ல அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பிறமதக்கலாச்சாரத்தில் இருந்து நம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும் இந்த வரதட்சனை என்னும் கொடுமையை அகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்கு மஹர் கொடுத்து மணமுடியுங்கள்!

இம்மை மறுமையில் வெற்றியடைங்கள்!

No comments:

Post a Comment